தேர்வு பாதிக்காமல் தேர்தல் பணிகளை எவ்வாறு கையாளுவது?- கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

 
அன்பில் அன்பில்

பள்ளிக் கல்வித்துறை மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

TET தேர்வு கட்டாயம்.. அன்பில் மகேஷ் ஆலோசனை

பள்ளிக் கல்வித்துறை உயர் அலுவலர்களுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள கன்னிமாரா நூலக கூட்டரங்கத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அளவில் பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், மாவட்ட கல்வி அலுவலர்கள், இணை இயக்குநர்கள், தேர்வு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு துறையின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.

குறிப்பாக, பள்ளிக் கல்வித்துறையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ,  பள்ளி கட்டிடங்கள், வகுப்பறை வசதிகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள்  விளக்கினர். மேலும், விரைவில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்காக மாணவர்களை எவ்வாறு  தயார்படுத்துவது, பாடத்திட்டம் முடிப்பதற்கான கால அட்டவணை, சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவது  குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆண்டில் தேர்வு காலத்துடன் தேர்தல் பணிகளும் ஒரே நேரத்தில் வருவதால், தேர்வு பணிகளை பாதிக்காமல் தேர்தல் பணிகளை எவ்வாறு கையாளுவது, ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் பணிச்சுமையை சமநிலைப்படுத்துவது குறித்தும்  ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறைக்காக அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள்  ஸ்மார்ட் வகுப்பறைகள், டிஜிட்டல் கல்வி, ஆசிரியர் பயிற்சி திட்டங்கள், மாணவர் நலத் திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடு மற்றும் நடைமுறை முன்னேற்றம் குறித்தும் இந்த கூட்டத்தில்  பரிசீலிக்கப்பட்டது.