பள்ளியில் திடீரென மயங்கி விழுந்து பிளஸ் டூ மாணவி உயிரிழப்பு

 
death

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஒருவர் பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது

Death

 மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கட்டக்குளம் கிராமத்தைச் சேர்ந்த  அழகர் -  வீரம்மாள் தம்பதியினர் மகள் ஆனந்தி வயது (17). இவர் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை பள்ளிக்குச் சென்ற ஆனந்தி பள்ளி வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை பள்ளி ஆசிரியர்கள் வாடிப்பட்டி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு ஆனந்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் தரப்பட்டு போலீசார் மாணவியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவி ஒருவர் பள்ளி வளாகத்துக்குள்ளேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.