பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

 
ttn

கோவை உக்கடம் கோட்டைமேடு பெருமாள்கோவில் வீதியை சேர்ந்தவர் மகுடேஸ்வரன். இவரது 17 மகள் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில்,  மாற்றுச் சான்றிதழ் பெற்று அதேபகுதியில் உள்ள அம்மணியம்மாள் பள்ளியில் 12 ஆம் வகுப்பு சேர்ந்தார்.  இதை தொடர்ந்து கடந்த நவம்பர் 11ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அத்துடன் மாணவியின் கடிதமும் கிடைத்தது. அதில் மாணவிக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

ttn

மாணவி புகார் அளித்தும் தனியார் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் அவர் பள்ளியில் இருந்து வெளியேறியதாகவும், இதனால் மனவேதனையில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.  இதைத் தொடர்ந்து ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டதுடன் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து நன்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் போக்ஸோ  சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

arrest

இந்நிலையில் போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. மிதுன் சக்ரவர்த்தியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நிலையில் ஆசிரியர் மீது காவல்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.