தனியார் பள்ளி வாகனம் வயலுக்குள் கவிழ்ந்து விபத்து - 10 மாணவர்கள் காயம்!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வாகனம் வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் காயம் அடைந்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இன்று திங்கள் கிழமை என்பதால் அந்த தனியார் பள்ளி வாகனம் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளி நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த பள்ளி வாகனத்தில் சுமார் 40 மாணவர்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம், தாறுமாறாக ஓடு சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் வாகனத்தில் இருந்த மாணவர்கள் அலறி துடித்தனர்.
சம்பவத்தை பார்த்ததும் உடனடியாக அங்கு சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் வேனில் சிக்கி இருந்த பள்ளி மாணவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 10 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரே வாகனத்தில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றி செல்வதாகவும், இதனாலயே விபத்து ஏற்பட்டதாகவும் பெற்றோர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.


