ஓசூரில் முறைகேடாக செயல்பட்டு வந்த 7 பட்டாசு கடைகளுக்கு சீல்!

 
சீல் வைப்பு

அத்திப்பள்ளி பட்டாசு குடோன் வெடி விபத்து சம்பவத்தின் எதிரொலியாக ஓசூர் நெடுஞ்சாலை பகுதிகளில் முறைகேடாக செயல்பட்டு வந்த 7 பட்டாசு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி பகுதியில் நவீன் என்பவர் பட்டாசு கடை நடத்தி வந்தார். இவர் தனது பட்டாசு கடைக்கு  கண்டெய்னர் வாகனத்திலிருந்து பட்டாசு பாக்ஸ்களை இறக்கும்போது எதிர்பாராத விதமாக தீப்பற்றி பட்டாசுகள் வெடித்து சிதறியது.  இந்த தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். அத்திப்பள்ளியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்திப்பள்ளி பட்டாசு கடை உரிமையாளர் நவீன் ரெட்டி மற்றும் ராமசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு குறைபாடு, கவனக்குறைவு காரணமாக பட்டாசு கடையில் விபத்து ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே அத்திப்பள்ளி பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. 

athipalli

இந்த நிலையில், அத்திப்பள்ளி பட்டாசு குடோன் வெடி விபத்து சம்பவத்தின் எதிரொலியாக ஓசூர் நெடுஞ்சாலை பகுதிகளில் முறைகேடாக செயல்பட்டு வந்த 7 பட்டாசு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு-ஓசூர் நெடுஞ்சாலைகளில் உள்ள பட்டாசு கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில், 7 பட்டாசு கடைகள் முறைகேடாக செயல்பட்டு வந்தது. இதனையடுத்து அந்த 7 கடைகளுக்கும் சீல் வைத்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.