ரகசிய கூட்டணி அமைத்து விலை குறைப்பு.. விவசாயிகள் கவலை.. அரசு வேடிக்கை பார்ப்பதா? - அன்புமணி

 
anbumani anbumani

மாம்பழம் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் உழவர்கள் நலன் கருதி மாம்பழ விலையை அரசே விலை நிர்ணயிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மாம்பழ விளைச்சல் அதிகரித்திருப்பதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இதனால் உழவர்களும், மரங்களை குத்தகைக்கு எடுத்தவர்களும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில், அவர்களின் துயர் துடைக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும்  எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக அளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. சேலத்து மாம்பழம் என்று போற்றப்படும் மாம்பழ வகைகள் இந்த மாவட்டத்தில் தான் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. நடப்பாண்டில் மாம்பழங்கள் விளைச்சல் அதிகமாக இருந்ததால், வழக்கத்தை விட சற்று கூடுதல் லாபம் கிடைக்கும் என்று நினைத்திருந்த உழவர்களுக்கு மாம்பழ விலை வீழ்ச்சியால் பெரும் ஏமாற்றம் தான் பரிசாகக் கிடைத்திருக்கிறது.

கடந்த ஆண்டில் ஒரு டன் மாம்பழம் சராசரியாக ரூ.22 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இம்முறை ஒரு டன் மாம்பழத்தின் சராசரி  விலை ரூ.4,000 ஆக வீழ்ச்சி அடைந்து விட்டது. பல இடங்களில் இந்த  விலைக்கு கொள்முதல் செய்வதற்கு வணிகர்களோ, மாம்பழக்கூழ் ஆலைகளோ முன்வரவில்லை. ஒரு டன் மாம்பழத்தை  ரூ. 4 ஆயிரத்துக்கு  விற்பனை செய்தால் உழவர்களுக்கு எந்த இலாபமும் கிடைக்காது; மாறாக ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக இழப்பு ஏற்படும். இந்த இழப்பை உழவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

மாம்பழம் சாப்பிட்ட பிறகு இந்த 5 உணவுகள சாப்பிடாதீங்க… உடலுக்கு ஆபத்து என எச்சரிக்கை!

மாம்பழ விலை வீழ்ச்சியால்  உழவர்கள் மட்டுமின்றி, மாமரங்களை குத்தகைக்கு எடுத்து  மாம்பழங்களை அறுவடை செய்து சந்தையில் விற்பனை செய்யும் குத்தகைதாரர்களும், சிறு வணிகர்களும் கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு கடுமையான வறட்சியால்  விளைச்சல் பாதிக்கப்பட்டு உழவர்களும், சிறு வணிகர்களும் பெரும் இழப்பை சந்தித்தனர். நடப்பாண்டில் மாம்பழங்கள் நல்ல விலைக்கு விற்பனையானால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட இழப்பை நடப்பாண்டில் ஓரளவாவது சரி செய்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த  உழவர்கள் மற்றும் சிறு வணிகர்களை விலை வீழ்ச்சி பேரிடியாக தாக்கியிருக்கிறது.

மாம்பழங்களின்  விலை வீழ்ச்சிக்கு  உற்பத்தி அதிகரிப்பு மட்டுமின்றி,  மேலும் பல காரணங்களும் கூறப்படுகின்றன. அவற்றில் முதன்மையானது மாம்பழம் கொள்முதல் செய்யும் மொத்த வணிகர்கள் தங்களுக்குள் ரகசியக் கூட்டணி அமைத்து கொள்முதல் விலையை குறைத்துள்ளனர். இது தவிர,  சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருப்பதால்  அவை மாம்பழங்களை கொள்முதல் செய்ய மறுப்பது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதில் புதிதாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஆகியவையும் சிக்கலுக்கு காரணம் ஆகும்.

இந்த சிக்கல்களை சரி செய்ய வேண்டியது  மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும். ஆனால், மாம்பழங்களின் விலை வீழ்ச்சியை சமாளிக்க இரு அரசுகளும் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்கவும்,   கொள்முதல் செய்யவும் தனித்தனி அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  திமுக ஆட்சிக்கு வந்தால் காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட அனைத்து விளைபொருள்களுக்கும் கொள்முதல்  விலை நிர்ணயிக்கப்படும்  என்று 2021-&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக  வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடப்பாண்டில் எந்த பயிரும் விளைச்சலுக்கு குறைவில்லை. ஆனால், அரசின் தவறான கொள்கைகளும், வழிகாட்டுதல்களும் தான் உழவர்களை பெரும் இழப்புக்கு ஆளாக்குகின்றன. தர்பூசணி பழங்களில்  சிவப்பு சாயம் செலுத்தப்படுகிறது என்று  தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் பரப்பிய அரைகுறையான  விழிப்புணர்வு செய்தியால் தர்பூசணி பழங்களின் விற்பனை சரிந்து உழவர்கள் கடனாளி ஆனார்கள். இப்போது விலை வீழ்ச்சியைத் தடுக்காததால் மாம்பழ உழவர்கள் பெரும் இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது.

ரகசிய கூட்டணி அமைத்து விலை குறைப்பு.. விவசாயிகள் கவலை..  அரசு வேடிக்கை பார்ப்பதா? -  அன்புமணி  

தமிழக அரசு உடனடியாக மாம்பழ உழவர்கள்,  வணிகர்கள் மற்றும் மாம்பழக்கூழ் ஆலைகளின் உரிமையாளர்களை அழைத்துப் பேசி  மாம்பழங்களுக்கு கட்டுபடியாகும் விலையை  நிர்ணயம் செய்ய வேண்டும். மாம்பழங்கள் மற்றும் மாம்பழக்கூழை  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் உள்ள தடைகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.