"புதிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்" - செல்வப்பெருந்தகை எம்எல்ஏ

 
selvaperunthagai

புதிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தின் மக்களவையில் அத்துமீறி நுழைந்து, கலர் பாம் வீசிய செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இச்சம்பவத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பு மிகுந்த கேள்விக்குறியாகியுள்ளது.

selva perunthagai

கடந்த சில மாதங்களுக்கு முன், தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகைக்கு வெளியே சாலையில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்ததை, உடனடியாக தடுத்து நிறுத்தி சம்பவத்தில் ஈடுபட்டவரை கைது செய்தது தமிழ்நாடு அரசு. 

ஆனால், விரும்பத்தகாத இச்சம்பவத்தை பெரிது படுத்தி, எதிர்க்கட்சிகள் ஏதோ தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். இன்று (13.12.2023) ஆளுநர் தமிழிசை சௌந்தர் ராஜன் அவர்கள் ஆளுநர்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறியிருக்கிறார். 


நாட்டின் இறையாண்மையான மக்களவையில் உள்ள உறுப்பினர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருக்கிறது. இதற்கு என்ன கருத்து சொல்வார்கள்? யாரை குற்றம் சொல்வார்கள்?

இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்தவித சமரசம் செய்து கொள்ளக்கூடாது. புதிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.