சீமான் மற்றும் திருமுருகன் காந்தி “டிவிட்டர் கணக்கு முடக்கத்தை” நீக்குக! - முத்தரசன் கோரிக்கை..

 
mutharasan mutharasan

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோரது ட்விட்டர் கணக்குகள் முடக்கத்தை நீக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்களின் “டிவிட்டர்” கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களது “டிவிட்டர்” கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இக்கணக்குளை முடக்க “சட்ட கோரிக்கை” வந்ததாக ட்விட்டர் நிர்வாகம் கூறுகின்றது. தமிழ்நாடு காவல்துறை இப்படிப்பட்ட கோரிக்கை வைக்கவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது.

seeman

இந்தியாவில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் செயல்கள் ஏராளமாக நடந்துள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் பின்னணி இவை அனைத்திற்கும் உண்டு என்பதை உலகமறியும். தற்போதையக ட்விட்டர் கணக்கு முடக்கத்திற்கும் இப்பின்னணி உள்ளதா? என கேள்வி உள்ளது. உடனடியாக இத்தடைகளை நீக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகின்றது.” என்று குறிப்பிட்டுள்ளார்.