எங்களை என்ன பண்ண முடியும்? திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கு சீமான் சவால்?
நாம் தமிழர் கட்சியை பிரிவினை வாத இயக்கம் என திருச்சி எஸ்.பி, வருண்குமார் விமர்சித்த நிலையில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சண்டிகாரில் நடைபெற்ற தேசிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் உரையாற்றிய திருச்சி எஸ்பி வருண்குமார், “தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி என்றொரு அமைப்பு இருக்கிறது. தொடர்ந்து பிரிவினைவாதம் பேசக்கூடிய ஒரு கட்சியாக இருக்கிறது. பொதுமக்களை தொடர்ந்து ஆபாசமாக வக்கிரமாக பேசக்கூடிய கட்சியாக அது இயங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த ஆபாச இணையதள தாக்குதலால் நானும் என் குடும்பமுமே பாதிக்கப்பட்டிருக்கிறோம். எனவே கூர்மையாக கவனிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத ஆபாச தாக்குதல் கட்சி. பிரிவினைவாத இயக்கம். இணைய குற்றம் செய்யும் கூலிகளை கண்காணிக்க 14C என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என பேசினார். இது நாம் தமிழர் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி எஸ்.பி, வருண்குமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான் இந்த காக்கி சட்டையில் நீங்கள் எவ்வளவு ஆண்டு இருந்து விடுவீர்கள். அடுத்தவர்களை விமர்சிக்கும் போது பார்த்து பேச வேண்டும். உறுதிப் பிரமாணம் எடுக்கும் போது இதை தான் பேசுனீர்களா? இததான் உங்கள் வேலையா? எங்கள் கட்சியை குறை கூறுவதற்கு தான் ஐபிஎஸ் ஆகி வந்திருக்கிறீர்களா? மோதுவது என்று உறுதியாகியுள்ளது, மோதி பார்ப்போம் வாருங்கள்? உங்களால் என்னை என்ன பன்ன முடியும். நீங்கள் ஒரு சாதாரண ஐபிஎஸ் அதிகாரி என கூறியுள்ளார்.