தமிழ் தேசியம், திராவிடம் என்றால் என்னவென்று விஜய் விளக்குவாரா? - சீமான் கேள்வி
விஷமும், அதை முறிக்கும் மருந்தும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். சமீபத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த மாநாட்டில் தனது கட்சியின் கொள்கையையும், கோட்பாட்டையும் வெளியிட்டார். அவரது கொள்கை, கோட்பாட்டிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்பையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தனர். அந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு உண்டு என அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பு சிறிய கட்சிகள் பலவற்றையும் பெரிதும் ஈர்த்தது.

இந்த நிலையில், நடிகர் விஜய் கட்சியின் கொள்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடம் தமிழ் தேசிய மக்களை ஆள துடிக்கிறது; திராவிடமும், தமிழ் தேசியமும் வேறுவேறு. தமிழ் பயிற்று மொழி, ஆங்கிலம் பயிற்று மொழி, வேண்டுமென்றால் பிற மொழிகளை கற்கலாம். திராவிடம் என்பதை விஜய் கட்சியில் யார் விளக்குவார்கள்? தமிழ் தேசியம் என்பது வேறு.திராவிடம் என்பது வேறு. விஷமும், அதை முறிக்கும் மருந்தும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? தம்பி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. தமிழ் தேசியம், திராவிடம் என்றால் என்னவென்று விஜய் விளக்குவாரா? என கேள்வி எழுப்பினார்.


