”நான் தான் இந்த நாட்டுக்கே பாதுகாப்பு.. எனக்கு எதுக்கு பாதுகாப்பு? விஜய்க்குதான் பாதுகாப்பு வேணும்”- சீமான்

 
seeman seeman

கோவை விமான நிலையத்தில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். 

seeman

அப்போது பேசிய சீமான், “பாதுகாப்பு கேட்பவர்களுக்கு, பாதுகாப்பு என்பது தேவைப்படுகிறது. அதனால் அனைவரும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள். எங்களுக்கு தேவையில்லை, அதனால் நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. நான் மக்களுக்காக வந்திருக்கிறேன் அதனால் நான் தான் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எனக்கு எதற்கு பாதுகாப்பு என்றுதான் காவலர்களிடம் நான் கேட்பேன். விஜய் போன்ற ஒரு புகழ்பெற்ற நடிகருக்கு பாதுகாப்பு தேவை தான், அதனால் அவர் பாதுகாப்பு கேட்டு வாங்கிக் கொண்டார். நாங்களே ஒவ்வொருவரும் வெடிகுண்டு, அணுகுண்டு.. நாங்கள் ஒரு வார்த்தை பேசினால் அது ஒரு வாரத்திற்கு ஓடிக் கொண்டிருக்கிறது. சேகுவேரா, வினையாற்றாத சொல் வீண் என்று கூறி இருக்கிறார், அப்படி இருக்கையில் நாங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வெடிகுண்டு தான். 

அரசியல் லாபத்திற்காக பிரபாகரன் புகைப்படத்தை சீமான் பயன்படுத்துவதற்கு தடை விதித்து இருக்கிறார்கள். பிரபாகரன் புகைப்படத்தை பயன்படுத்துவதால் அரசியல் லாபம் என்று கருதினால் அந்த பைத்தியங்கள் அவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிரபாகரன் படத்தை அனைத்து கட்சிகளுமே போடலாம், ஆதாயம் இருந்தால் அனைவரும் அவரின் படத்தை தயவுசெய்து பயன்படுத்துங்கள். வட இந்தியர்கள் எந்தவித ஒழுங்கையும் கடைபிடிக்க மாட்டார்கள், ஈரோட்டில் வந்து தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டு தமிழர்களுக்கு வேலை கொடுக்காதீர்கள் என்று போராட்டம் நடத்தினார்கள்.. இப்பொழுது இது செய்தியாக இருக்கலாம், இன்னும் பத்து ஆண்டுகளில் ஈழத்தில் என்ன நடந்ததோ, வந்த சிங்களர்கள் எங்களை எப்படி அடித்து விரட்டினார்களோ அதே போன்று இங்கு நடக்கும். அங்கு விரட்டும்போது இங்கு நாங்கள் நிற்பதற்கு ஒரு நிலம் இருந்தது. ஆனால் அவர்கள் விரட்டும் போது இங்கு இருப்பவர்களுக்கு நிற்பதற்கு நிலம் கூட இருக்காது” என்றார்.