தற்கொலை செய்ய போறேனு முன்னாடியே சொன்னார்; நாங்க தான் போலீசில் பிடித்து கொடுத்தோம்- சீமான்

 
தற்கொலை செய்ய போறேனு முன்னாடியே சொன்னார்; நாங்க தான் போலீசில் பிடித்து கொடுத்தோம்- சீமான்

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள காந்தி கிராமத்தில் தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி, அங்கு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். சிவராமனை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் சிவராமன், தான் எலி பேஸ்ட் உட்கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இங்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. நேற்று காலை முதலே மூச்சுத் திணறல் காரணமாக சிவராமனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிவராமன் இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில்  வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றவியல் நடுவர் விசாரணைக்கு பிறகு சிவராமனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட  உள்ளது. சிவராமன் உயிரிழப்பு தொடர்பாக கிருஷ்ணகிரி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.. - சீமான் கோரிக்கை..

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “சிவராமன் கொஞ்ச காலத்திற்கு முன்பே சாகப்போகிறேன் என வருத்தம் தெரிவித்து எனக்கு கடிதம் எழுதியிருந்தார். கட்சித் தம்பிகளிடம் அதைக் கொடுத்து விசாரிக்கச் சொன்னேன். தவறு செய்தது தெரிந்ததும், அவரை போலீசில் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் தம்பிகள்தான். குற்ற உணர்ச்சி இருந்ததால்தான் தற்கொலை செய்துள்ளார். மகன் செய்த தவறால் அடைந்த மனவேதனையில் அப்பாவும் மதுபோதையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதில் எந்த சந்தேகமும் இல்லை, இதன் பின்னணியில் யாரும் இல்லை” என்றார்.