கடலில் பேனா சின்னம் அமைப்பதை எதிர்த்து சட்டப்போராட்டம் - சீமான் அறிவிப்பு!

 
seeman

கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டத்தினை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். 

சென்னை மெரினா கடலுக்கு நடுவே ₹81 கோடி செலவில் 'கலைஞர் பேனா நினைவுச் சின்னம்' அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னம் அமைக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசின் அனுமதிக்காக தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. மத்திய சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறை  ஆகியவற்றிடமும் அனுமதி கோரியிருந்தது.  இந்த நிலையில்  சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்திருக்கிறது.  ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கூட்டத்தில் இதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு மத்திய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது.  "மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை மத்திய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மக்கள் விரோத - சூழலியல் விரோத இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளது என்று அறிவிக்கிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.