மத்திய, மாநில அரசுகளுக்கு சீமான் கண்டனம்!

 
1

பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. 5476 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள விமான நிலையத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த சூழலில் விமான நிலையத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் தயார் செய்ய மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சிக் கழகம் முன்மொழிந்துள்ள திட்டத்திற்கான சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுக்கான வரையறையை ஒன்றியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும் என்றும், இந்த ஆய்வு வரையறையினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து 775 நாட்களுக்கு மேலாக பரந்தூர் ஏகனாபுரம் மக்கள் போராடி வருவதாக சுட்டிக்காட்டிய சீமான், “மக்களின் உணர்வுகளை மதிக்காமல், அவர்களை ஒருமுறை கூட நேரில் சந்திக்காமல் ஒன்றிய-மாநில அரசுகள் இத்திட்டத்தைச் செயல்படுத்த நினைப்பது, மக்களாட்சி மாண்பினைக் காலில் போட்டு மிதிக்கும் செயலாகும்” என்று காட்டமாக குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் இராம்சார் தளங்களை அறிவித்ததற்குப் பெருமை கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி அரசு, ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவில் ஈர நிலங்கள் மற்றும் வேளாண் பகுதிகளைக் கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்க அனைத்து வழிகளையும் அமைத்துத் தருவது பாஜக அரசின் உண்மை முகத்தைக் காட்டுகிறது என்று குற்றம்சாட்டினார்.

மேலும், “தமிழ்நாட்டின் வளங்களை அழிக்கும் நோக்கிலேயே செயல்பட்டு வரும் ஒன்றிய அரசினை தமிழ்நாட்டு மக்கள் முற்றிலுமாகப் புறக்கணிப்பதில் வியப்பு எதுவும் இல்லை. இனியும் இப்போக்கினைத் தொடராமல், இத்திட்டத்திற்கான முன்னெடுப்புகளையும் அனுமதிகளையும் கைவிட்டு, பரந்தூர் வானூர்தி நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினருடைய கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து செயற்பட வேண்டும்” என்று மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி உள்ளார்.