‘மலிவான அரசியல் விளம்பரத்துக்கு பலி கொடுக்கப்பட்ட காவல்துறை அதிகாரி’ - சீமான் கண்டனம்..

 
Seeman


மலிவான அரசியல் விளம்பரத்திற்காக காவல்துறை அதிகாரி பலி கொடுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய கொடுமை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “சென்னை அண்ணா சாலையில் நடைபெறும் கார் பந்தயப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் அன்புச்சகோதரர் சிவகுமார் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனத்துயரமும் அடைந்தேன். கார் பந்தயம் சிறப்புற நடைபெற, மக்களை வதைக்கும் வகையில் தடைசெய்யப்பட்ட சாலைகளால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைச் சீர்படுத்த வேண்டுமென்ற மன அழுத்தமும், அதன் காரணமாக இரவு-பகல் பாராது மேற்கொண்ட கடும் பணிச்சுமை ஏற்படுத்திய உடல்நலிவுமே அநியாயமாக ஓர் உயிரைப் பறித்துள்ளது. 

‘மலிவான அரசியல் விளம்பரத்துக்கு பலி கொடுக்கப்பட்ட காவல்துறை அதிகாரி’ - சீமான் கண்டனம்..  

மக்களைக் காக்கும் மகத்தான சேவையாற்றும் உன்னத காவல்துறை அதிகாரியின் உயிர், மலிவான அரசியல் விளம்பரத்திற்காக நடத்தப்படும் மகிழுந்து பந்தயத்தால் பலி கொடுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய கொடுமையாகும். சகோதரர் சிவகுமாரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

பணியின் போது உயிரிழந்த காவல்துறை உதவி ஆணையர் சிவக்குமார் அவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய துயர் துடைப்பு நிதியை வழங்கவேண்டும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கவேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். சகோதரர் சிவகுமார் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.