அறவழியில் போராடிய 800க்கும் மேற்பட்ட மக்களை கைது செய்தது கண்டனத்திற்குரியது- சீமான்
திருப்பூர் மாநகராட்சியின் குப்பைக் கழிவுகளைப் பாறைக்குழிகளில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிட்கோ பகுதியில் நேற்று (02-09-2025) அறவழியில் போராடிய 800க்கும் மேற்பட்ட மக்களை காவல்துறை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஜூலை 30ஆம் தேதி இச்சிப்பட்டி ஊராட்சியில் நடந்த இதே மாதிரியான அடக்குமுறையை இந்நிகழ்வு நினைவுபடுத்துகிறது. அப்போதும் காவல்துறையின் கொடுங்கோன்மைச் செயலால் ஒரு பெண்ணின் கால் முறிந்து, ஒரு நபர் தற்கொலை முயற்சி செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்த இரு நிகழ்வுகளும், மக்களாட்சி மாண்பைக் காலில் போட்டு மிதிக்கும் வன்முறை செயல்களாகும். திருப்பூரின் விரிவான தொழில்துறை மற்றும் நகரமயமாதல் காரணமாக, நகரில் நாள் ஒன்றிற்கான குப்பை உற்பத்தி ஏறக்குறைய 4.80 மெட்ரிக் டன் என்ற அளவில் அதிகரித்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகள், 2016ன் படி பெரும் அளவிலான கழிவு உற்பத்தியாளர்களுக்கு (Bulk Waste Generators) குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இருப்பினும், திருப்பூர் மாநகராட்சி இந்த விதிகளை மீறி, பாறைக்குழிகள் மற்றும் கிராமப்புறங்களில் குப்பையைக் கொட்டுவது விதிமீறலாகும்.
இச்சிப்பட்டி கிராமத்தில் நடந்ததுபோல ஏற்கனவே பொங்குப்பாளையம் பஞ்சாயத்து பகுதியில் கைவிடப்பட்ட பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டப்பட்டது. இந்த விதிமீறலுக்கு எதிராக, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) திருப்பூர் மாநகராட்சிக்கு ₹3.15 கோடி அபராதம் விதித்து, மறுசுழற்சிக்கு உட்படுத்தாமல் கழிவுகளைப் பொதுவெளியில் கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இருந்தபோதிலும், இந்தத் தீர்ப்பு வந்த ஒரு வாரத்திற்குள்ளேயே மீண்டும் வேறு ஒரு பகுதியில் குப்பைகளை நகராட்சி கொட்டி வந்தது பேரவலமாகும். தமிழ்நாடு அரசின் இந்த நிர்வாகத் தோல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிக்காததால் ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு புதிய இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு குப்பைகள் உரிய முறையில் சுழற்சி செய்யப்படும் என்று ஆட்சியாளர்கள் உறுதியளித்த சில நாட்களுக்குள்ளேயே மீண்டும் சிட்கோ பகுதியில் நேற்று குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனை எதிர்த்துப் போராடிய பொதுமக்களைக் காவல்துறை கைது செய்த நடவடிக்கை மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்காததைக் காட்டுகிறது.

அரசும் விதிகளைக் கடைபிடிக்காமல், அதற்கான அபராதமும் விதிக்கப்பட்டு, பின்னரும் விதிகளைக் காற்றில் பறக்கவிடுவது ஆட்சித் தோல்வியின் உச்சமாகும். அதனைக் கேள்வி கேட்கும் பொதுமக்களை அடக்கி ஒடுக்குவது ஆளும் அரசின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. காலையில் மக்கள் கைது செய்யப்பட்டு, பிறகு எதிர்ப்பு எழுந்ததும் மாலையளவில் விடுவிக்கப்பட்டாலும் நிரந்தரத் தீர்வு குறித்த உறுதியளிக்கக்கோரி அவர்கள் போராடி வருகின்றனர். தன் குடிமக்களை எந்நேரமும் வீதியில் இறங்கி போராடும் நிலையில் வைத்திருக்கும் திமுக அரசு இனியாவது குப்பைக்கழிவுகளை உரிய மறுசுழற்சிக்கு உட்படுத்தி, திடக்கழிவு மேலாண்மை விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


