திருத்தணி அருகே மணல் கடத்தல் அமோகம்.. மணல் கொள்ளையர்களுக்கு துளியும் பயமில்லை- சீமான்

 
seeman seeman

திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியில் நடைபெறும் மணல் கடத்தலை தமிழ்நாடு அரசு தடுத்துநிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

seeman

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியிலிருந்து சவ்வூடு மணல் கொள்ளை நடைபெறுவதை தமிழ்நாடு அரசு தடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது.சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் மற்றும் பயண நேரத்தைக் குறைப்பதற்காக இருவழிச் சாலையானது நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும் நிலையில், அதற்கு தேவையான சவ்வூடு மணலானது திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியிலிருந்து எடுக்கப்படுகின்றது. 5 அடி ஆழம் வரை மட்டுமே மணல் எடுக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் சாலை ஒப்பந்த நிறுவனத்தாரால் 12 அடி ஆழத்திற்கும் அதிகமாக சவ்வூடு மணல் நாள்தோறும் வெட்டி எடுக்கப்படுகிறது. அதிகளவில் மணல் கொள்ளையடிக்கப்படுவது குறித்து திருத்தணி பகுதி மக்கள் புகாரளித்ததையடுத்து கோட்டாட்சியரால் அப்பகுதியில் மணல் அள்ள தடையும் விதிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகும் பட்டாபிராமபுரம் ஏரிப்பகுதியில் தொடர்ச்சியாக மணற்கொள்ளை நடைபெற்று வருவதை தமிழ்நாடு அரசால் தடுக்க முடியவில்லை என்பது திமுக அரசின் நிர்வாகத்திறமை இன்மையையே காட்டுகிறது.

மணல் என்பது இயற்கை அளித்த கொடை; பூமித்தாயின் மடி. அதுவே உலகின் தலைசிறந்த வடிகட்டியுமாகும். நீராதாரத்தைத் தக்கவைக்கும் பெரும் சேமிப்புக்கலனாகவும் அது விளங்குகிறது. அத்தகைய இன்றியமையாத மணல் தமிழகத்தின் அத்தனை ஆறுகளிலிருந்தும் திருட்டுத்தனமாக அள்ளப்பட்டு தமிழகத்தின் ஜீவநதிகள் யாவும் இன்றைக்குச் செத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு கியூபிக் மீட்டர் மணலை அள்ளினால் மூன்று கியூபிக் மீட்டர் நிலத்தடி நீர் மட்டம் கீழே போகும் என்பது இயற்கை விதி. இதனைக் கடைபிடிக்காது வரைமுறையற்றுத் தொடர்ச்சியாக மணலை அள்ளுவதன் மூலம் சுற்றுச்சூழல் சமநிலை சீர்கேட்டு நிலத்தடி நீர்மட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அண்டை மாநிலமான கேரளாவில் மணல் கொள்ளை என்பதே முற்றிலுமில்லை என அறுதியிட்டுச் சொல்கிற அளவுக்கு அந்த மண்ணின் ஆட்சியாளர்கள் தங்களது இயற்கை வளத்தைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். ஆந்திராவிலும், கேரளாவிலும்கூட மணல் அள்ளுவதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் போடப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்திலோ மணல் கொள்ளையானது ஆறுகள் மட்டுமின்றி ஏரிக்கரை பகுதிகளில் கூட  கட்டுக்கடங்காமல் வெட்டி அள்ளப்பட்டு தமிழகத்தின் இயற்கை வளம் கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் திருட்டுத்தனமாகக் கொண்டு செல்லப்பட்டுக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

Seeman

தமிழகத்திற்குரிய நீராதாரங்களைத் தடுத்து அண்டை மாநிலங்கள் அணை கட்டுவதற்குக்கூடத் தமிழகத்திலிருந்துதான் மணல் செல்கிறது என்பதன் மூலம் மணல் கொள்ளையின் கோரமுகத்தை அறிந்து கொள்ளலாம். மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற காவலர்களையும், அதிகாரிகளையும் சமூக விரோதிகள் அடித்துக்கொலை செய்கிறார்களென்றால் மணல் கொள்ளையர்களின் கை ஓங்கி அவர்கள் எந்தளவுக்கு பயமின்றி திமிறி நிற்கிறார்கள் என்பதை அறிய முடியும். அவர்களுக்கு இத்தகைய துணிவு திமுக ஆட்சியாளர்களின் துணையில்லாது வந்திருக்குமா? தமிழ்நாட்டில் நிகழும் திராவிட கட்சிகளின் ஆட்சி மாற்றம் இந்த மணல் கொள்ளையர்களை ஒருபோதும் பாதிப்பதில்லை. திமுக ஆட்சியாக இருந்தாலும், அதிமுக ஆட்சியாக இருந்தாலும் மணல் கொள்ளையர்களின் ஆதிக்கத்திற்கு எவரும்  முடிவுகட்ட முனைவதில்லை. ஆற்று மணலைக் கொள்ளையடித்தால் குண்டர் சட்டம் பாயும் என்று அரசு ஒப்புக்குச் சொல்கிறதே ஒழிய, மணல் கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததாக இதுவரை செய்தியில்லை. மாறாக, மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடுகிற சமூக ஆர்வலர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீதுதான் வழக்குகள் பாய்ச்சப்படுகின்றன என்பதன் மூலம் இந்த அரசு  யாருக்கானது என்பது எளிதாக விளங்கும். ஆகவே, திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியில் கட்டுங்கடங்காது நடைபெறும். மணல் கடத்தலை தடுத்துநிறுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.