தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவிற்கு கஸ்தூரி என்ன தவறு செய்தார்?- சீமான்
தனிப்படை அமைத்து நடிகை கஸ்தூரியை கைது செய்யும் அளவிற்கு அவர் என்ன தவறு செய்தார்? இது பழிவாங்கும் நடவடிக்கை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் அணைக்குடம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் இல்ல காதணி விழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “நடிகை கஸ்தூரி கைது அவசியமற்றது. இதில் காயம் படவோ, வேதனை படவோ ஒன்றுமில்லை. திட்டமிட்டு வேண்டுமென்றே பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார்கள், அதை செய்கிறார்கள். அவர் பேசியதில் காயம் பட்டதாக சொல்கிறார்கள். நூற்றாண்டுகளாக ஒரு தமிழை பேரினத்தை திராவிடன் என சொல்லி வருகிறார்கள். நாங்கள் எவ்வளவு காயம் பட்டு இருப்போம். என்னுடைய அடையாளத்தை மறைத்து எனது இனத்திற்கு வேறு பெயர் வைக்க நீங்கள் யார்? அப்போது நாங்கள் எவ்வளவு காயம்பட்டிருப்போம். இதெல்லாம் சிறைப்படுத்தும் அளவிற்கு ஒரு குற்றமா? அதான் எனது கேள்வி!
ஒவ்வொருத்தரையும் கருத்தியலாக சண்டை போடுவது என்பது வேறு, அரசியலாக மோதுவது என்பது வேறு, கருத்து வைப்பது வேறு, தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் செய்வது, குடும்பங்களை பற்றி பேசுவது, தாய் தந்தையரை பற்றி பேசுவது பிறப்பை பற்றி பேசுவது அதெல்லாம் இருக்க அதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்? வழக்கு கொடுக்க வந்தால் வழக்கை எடுக்கிறார்களா? அவசர அவசரமாக தனிப்படை அமைத்து கஸ்தூரியை கைது செய்து சிறைப்படுத்தும் அளவிற்கு அவ்வளவு பெரிய குற்றமா அவர் செய்தார்?... சரி பேசினார்! தப்பு தான் அதற்கு மன்னிப்பு கேட்டு விட்டார்கள். அதற்கு பிறகு விட வேண்டியது தானே... அதற்கு ஒரு பெண்ணை அவசர அவசரமாக வேறு மாநிலத்திற்கு போய் கைது பண்ணி சிறைப்படுத்தும் அளவிற்கு பெரிய குற்றமா? இந்த நாட்டில் மலையை வெட்டி விற்றவன் வித்து கொண்டிருப்பவன், மண்ணை அள்ளி திண்பவன், ஊழல் லஞ்சத்தில் ஊறி திளைப்பவன், பெண்களை வன்புணர்வு செய்து கொலை செய்பவன், கொள்ளை அடிப்பவன் அவன் எல்லாம் வெளியில் தானே இருக்கிறான்?” என கேள்வி எழுப்பினார்.