“பொய்யிலேயே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர் அண்ணாமலை”- சேகர்பாபு

காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதுபோல் எதை எடுத்தாலும் குறை சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை என அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் திருக்கோயில்கள் சார்பில் 4 இணைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் திருமண இணைகளுக்கு ரூபாய் 60 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைகளை வழங்கி அமைச்சர் சேகர்பாபு வாழ்த்தினார். இதில் தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே.கருணாநிதி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சி.பழனி, இணை ஆணையர்கள் லட்சுமணன், ரேணுகா தேவி, முல்லை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “வேளாண் பட்ஜெட்டில் பொய்யும் புரட்டும் தான் இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகிறார். தினம் தோறும் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ஒரு தலைவர் ஒரு மாநில கட்சிக்கு இருப்பார் என்றால் அது அண்ணாமலை ஒருவராக தான் இருக்க முடியும். காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதுபோல் எதை எடுத்தாலும் குறை சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை. விலாசமற்ற மற்றும் மக்களின் ஆதரவு பெறாத அண்ணாமலைக்கு பதில் கூற விரும்பவில்லை.வேளாண் பட்ஜெட்டை உண்மையான விவசாய மக்கள் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள் ” என விமர்சித்தார்.