"ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய நடவடிக்கை தேவை" - ஜி.கே.வாசன்

 
gk vasan

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்வதற்கு  உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

gk

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் , எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் (தொகை) வசூலிக்காமல் இருப்பதற்கும் காவிரி - குண்டாறு திட்டத்தை முடித்து, விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கும், கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்வதற்கும், நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்வதற்கும் உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் தமிழக அரசு, விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொண்டுவரும் விவசாயிகளிடம் பணம் (தொகை) வசூலிப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை கொண்டுவரும் விவசாயிகளிடம் ரூ. 40 முதல் ரூ. 50, ரூ. 60 என வசூலிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விவசாயிகள் கடன் வாங்கி மிகுந்த சிரமத்தில் விவசாயம் செய்கின்ற வேளையில் பணம் வசூலிப்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் பொருளாதார சிரமம் ஏற்படுகின்றது. எனவே தமிழக அரசு, நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் ஏதும் வசூல் செய்யாமல் இருக்கவும், நெல்லை எடைபோடும்போது எடை சரியாக இருக்கவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

gk
தமிழக அரசு, காவிரி குண்டாறு திட்டத்தை காலம் தாழ்த்தாமல் விரைந்து முடித்து, நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் காவிரி குண்டாறு திட்டத்தை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பயனடைவார்கள். தேர்தல் வாக்குறுதி 75 ல் தெரிவித்தபடி ஒரு குவிண்டால் நெல்லுக்கான ஆதார விலை ரூ. 2,500 என்பதையும் ஒரு டன் கரும்புக்கான ஆதார விலை ரூ. 4,000 என்பதையும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. குறிப்பாக தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதி 66 ல் தெரிவித்தபடி கொப்பரை தேங்காயை அரசே கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும். மேலும் தேர்தல் வாக்குறுதி 56 ல் தெரிவித்தபடி பனைத்தொழிலை மேம்படுத்த பனை வெல்லத்தை கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகளில் வழங்க தமிழக
அரசு முன்வர வேண்டும்.

GK Vasan
அதே போல தேர்தல் வாக்குறுதி 57 ல் தெரிவித்தபடி தனி ஒரு விவசாயியின் விளைநிலம் பாதிக்கப்பட்டாலும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்பதையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். எனவே தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் ஏதும் வசூல் செய்யாமல் இருப்பதற்கும், தேர்தல் வாக்குறுதிகளில் விவசாயம் சம்பந்தமாக தெரிவித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கும் முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.