"சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ் பேசியதில் என்ன தவறு?” - செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி!

 
sellur raju

சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்வது பற்றி ஆலோசிக்கப்படும் என்று ஓபிஎஸ் கூறியதில் தவறு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, கட்சியை மீண்டும் தன்வசப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து பேசிய ஓபிஎஸ், இரட்டை தலைமையில் கட்சி சிறப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படுன் என்று கூறினார். சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவரும் சூழலில் ஓபிஎஸ் இவ்வாறு தெரிவித்தது அதிமுகவிற்குள் சர்ச்சையைக் கிளப்பியது. 

sellur

சசிகலாவை சேர்த்துக் கொள்ளக் கூடாதென ஓபிஎஸ் தான் கூறினார். தர்ம யுத்தம் செய்ததெல்லாம் எதற்காக? என்று ஓபிஎஸ்க்கு பதிலடி கொடுத்தார் ஜெயக்குமார். அதிமுகவில் கே.பி முனுசாமியும் ஓபிஎஸ்சின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில், சசிகலா விவகாரத்தில் கட்சிக்குள் மோதல் நீடிப்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், சசிகலா குறித்து ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் சொன்னதில் தவறு இல்லை. அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று தான் அவர் கூறினார். அவர் சொன்ன கருத்துக்களை இப்போது சர்ச்சையாக மாற்ற விரும்பவில்லை. சசிகலா விவகாரத்தில் அதிமுகவுக்கு சர்ச்சையே கிடையாது. சசிகலா குறித்து ஓபிஎஸ் கருத்து சொன்ன பிறகு எடப்பாடி பழனிசாமி கருத்து சொல்லவில்லை. ஓபிஎஸ் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் பிற நிர்வாகிகள் எதிர் கருத்து தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்தார்.