ரூ.1.37 கோடி பணமோசடி : எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் மணியின் நெருங்கிய நண்பர் கைது!!

 
ttn


கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளராக இருந்த மணி சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள நடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர்.  இவர் கடந்த 10 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமிக்கு உதவியாளராக இருந்து வந்துள்ளார்.  

eps

அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் லட்சக்கணக்கான ரூபாய் பெற்றுக்கொண்டு மணி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.  நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் , அரசு போக்குவரத்து கழக உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி 17 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.  இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் வங்கி கணக்கில் 17 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது .

mani

இதையடுத்து மணி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக தேடிவந்தனர்.  இதனிடையே முன்ஜாமீன் கேட்டு சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் மனு  தள்ளுபடி செய்யப்பட்டது.  இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி மணி தீவட்டிப்பட்டி பகுதியில் கைது செய்யப்பட்டார். மணி மற்றும் கூட்டாளிகள் அரசு பணி வாங்கி தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

arrest

இந்நிலையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.37 கோடி பணமோசடி புகாரில், எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் மணியின் நெருங்கிய நண்பர் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே மணி கைது செய்யப்பட்ட நிலையில், 3 மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த செல்வகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.