பா.ஜ.க.வை இந்த நாட்டில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை

 
 சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கனும் - செல்வப்பெருந்தகை

பா.ஜ.க.வை இந்த நாட்டில் இருந்து விரட்டியடிக்கப்படும் வரை காங்கிரஸ் தொண்டர்கள் கண் துஞ்சாமல், அயராமல் கடுமையாக உழைக்க வேண்டுமென்று அக்கட்சியனருக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்து ஆண்டுகால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயத்தோடு செயல்பட்டு வருகிறது. தவறான சமூகப் பொருளாதார கொள்கை காரணமாக மிகப்பெரிய பேரழிவை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்காமல் விவசாயிகளை வஞ்சித்தது, வெறுப்பு அரசியல் மூலம் மதநல்லிணக்க சீர்குலைவு போன்ற மக்களை பாதிக்கிற பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. இதை தீர்த்து வைப்பதற்கு பதிலாக 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆட்சியைப் பற்றி பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிற பணியில் பா.ஜ.க. அரசு தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறது. 

இத்தகைய ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டியது நமது தலையாய கடமையாகும். கடந்த டிசம்பர் 2023 நிலவரப்படி ஒன்றிய பா.ஜ.க. அரசின் மொத்த கடன் ரூபாய் 172 லட்சம் கோடி. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 57 சதவிகிதம். ஆனால், 1947 முதல் 2014 வரை 67 ஆண்டுகளில் நமது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பதவி விலகுகிற போது  பெறப்பட்ட மொத்த கடன் ரூபாய் 55 லட்சம் கோடி மட்டும் தான்.  ஆனால், கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் பா.ஜ.க. பெற்ற மொத்த கடன் 117 லட்சம் கோடி ரூபாய். ஒவ்வொரு இந்திய குடிமகன் மீதும் ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது. இதனால் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படாமல் தேவையற்ற வீண் ஆடம்பர செலவுகளை செய்ததால் கடுமையான பொருளாதார பேரழிவை நாடு தற்போது சந்தித்து வருகிறது.  சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான ஆக்ஸ்பார்ம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி மக்கள் தொகையில் 10 சதவிகித மேல்குடி வர்க்கத்தினர் இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பில் 77 சதவிகிதத்தை தம் வசம் வைத்துள்ளனர். 50 சதவிகித மக்கள் தொகையினர் ஏறத்தாழ 67 கோடி பேர் 1 சதவிகித சொத்துகளை மட்டுமே வைத்துள்ளனர். 

ஆனால், கடந்த ஒன்பதரை ஆண்டு மோடி ஆட்சியில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 1839 சதவிகிதமும், அம்பானியின் சொத்து மதிப்பு 400 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. உலக கோட்டீஸ்வரர்கள் மத்தியில் முதல் இடத்தை பெறுவதற்கு அதானியும், அம்பானியும் மோடி ஆட்சியின் தயவால் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மோடி ஆட்சியில் ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு பதிலாக அதானி, அம்பானி உள்ளிட்ட கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து சொத்து குவிக்கப்பட்டு வருகிறது. நடைபெறும் மோடி ஆட்சி சாமானிய மக்களுக்கான ஆட்சி இல்லை என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. மோடி ஆட்சியில் பலனடைந்த கார்ப்பரேட் பெருமுதலாளிகள் கைமாறாக தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். பா.ஜ.க. அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர நன்கொடை மூலம் 2018 முதல் 2023 வரை பெறப்பட்ட மொத்த நன்கொடை ரூபாய் 12 ஆயிரத்து 8 கோடி. இதில் பா.ஜ.க. பெற்ற மொத்த நன்கொடை 6564 கோடி ரூபாய். இது மொத்த நன்கொடையில் 55 சதவிகிதம். இந்த நன்கொடை திட்டத்தின் மூலமாக ரூபாய் 1 கோடி வழங்கியவர்கள் 6812 பேர். 

செல்வப்பெருந்தகை

இந்த நன்கொடையில் பெரும் பங்கு பா.ஜ.க.வுக்கு சென்றுள்ளது. தேர்தல் பத்திர நன்கொடை மூலம் கார்ப்பரேட் முதலாளிகள்  பெரும் நிதி வழங்குவதற்கு என்ன காரணம் ? கார்ப்பரேட்டுகள் நிதி வழங்குவது ஊழல் இல்லை என்றால் எது ஊழல் என்பதை மோடி அரசும், பா.ஜ.க.வும் தான் விளக்கம் அளிக்க வேண்டும். இதனால் தான் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நன்கொடை வழங்கியவர்களின் பட்டியல் மார்ச் 13 ஆம் தேதி தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அப்படி வெளியிடப்படும் போது பா.ஜ.க.வுக்கு நன்கொடை அளித்த கார்ப்பரேட்டுகள் யார் என்பது  அம்பலமாகும்.  அப்போது மோடியின் புனிதர் என்கின்ற முகத்திரை கிழித்தெறியப்படும். நெடுஞ்சாலை திட்டத்தின் மூலம் 7.5 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறது. அன்று 2ஜி குற்றச்சாட்டுக்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி வழக்கு தொடுத்து சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை நிரபராதிகள் என்று தீர்ப்பு அளித்தது. ஆனால், இன்று சி.ஏ.ஜி. அறிக்கை வெளிவந்த பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்க மோடி அரசு தயாராக இல்லை. 1 கி.மீ. தூரத்திற்கு ரூபாய் 18 கோடி அனுமதிக்கப்பட்டது. ஆனால் செலவழிக்கப்பட்டதோ ரூபாய் 250 கோடி.  இதைவிட மெகா ஊழல் வேறு என்ன இருக்க முடியும் ?

இந்தியாவில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டதாக மோடி தம்பட்டம் அடித்து கொள்கிறார். 2023 இல் வெளிவந்த சர்வதேச பசி குறியீட்டு பட்டியலின்படி 125 நாடுகள் வரிசையில் இந்தியா 111-வது இடத்தில் இருக்கிறது. 2022 இல் 107-வது இடத்தில் இருந்து 111-வது இடத்திற்கு உயர்ந்தது தான் மோடியின் வறுமை ஒழிப்பு சாதனையா ? அகில இந்திய காங்கிரஸ் சமீபத்தில் 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத அநியாயங்களை பட்டியலிட்டு புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. அந்த நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் துண்டு பிரசுரம் தயாரிக்கப்பட்டு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்து மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மாபெரும் பரப்புரை இயக்கத்தை மார்ச் முதல் வாரத்தில் காங்கிரஸ் இயக்கம் தமிழகம் முழுவதும் நடத்த இருக்கிறது.

இதன்மூலம் 10 ஆண்டு மோடி ஆட்சியின் அவலங்களை காங்கிரஸ் கட்சியினர் கிராமம் கிராமமாக, வீடு வீடாக கையில் காங்கிரஸ் கொடிகளை ஏந்திக் கொண்டு துண்டு பிரசுரங்களை விநியோகித்து தீவிரமான பரப்புரை இயக்கத்தை மேற்கொள்வார்கள். இந்தியாவிலேயே பா.ஜ.க. காலூன்ற முடியாத ஒரே மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இங்கே தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்டுக்கோப்பாக வலிமையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் 2019 இல் பெற்ற வெற்றியை விட நாற்பதும் நமதே என்ற இலக்கை நோக்கி நமது பயணம் பீடுநடை போட்டு வருகிறது. அந்த பயணம் வெற்றிப் பயணமாக அமைய காங்கிரஸ் கட்சியினர் மக்களவை தேர்தல் வரை மட்டுமல்லாமல் தொடர்ந்து பா.ஜ.க.வை இந்த நாட்டில் இருந்து விரட்டியடிக்கப்படுவது வரை கண் துஞ்சாமல், அயராமல் கடுமையாக உழைக்க வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.