ரூ. 10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு BSP நிர்வாகிக்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ்
பி.எஸ்.பி. மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 24 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அத்துடன் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பல்வேறு நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி புகார் அளித்தது. இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலாளர் ஜெய்சங்கர் என்பவர் ராகுல்காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன் மற்றும் அவரது தந்தை ரவுடி நாகேந்திரனை பயன்படுத்தி கொலையை அரங்கேற்றியுள்ளதாகவும், செல்வப்பெருந்தகையை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பி.எஸ்.பி மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு காங். தலைவர் செல்வப்பெருந்தகை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் அவதூறு கருத்து தெரிவித்தற்கு 710 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் தன்னை பற்றி பொய் செய்தி வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.