வீரமாமுனிவர் தமிழ் மொழிக்கு செய்த மகத்தான சேவையை நினைவுகூர்வோம் - செல்வப்பெருந்தகை

 
selvaperunthagai selvaperunthagai

வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாளான இன்று அவர் தமிழ் மொழிக்கு செய்த மகத்தான சேவையை நினைவுகூர்வோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தாலி நாட்டில் பிறந்து, தமது முப்பதாம் வயதிலேயே தமிழ்நாடு வந்த வீரமாமுனிவர் அவர்கள், தமிழில் இலக்கியப் படைப்புகளுள் மிக அரியதாகக் கருதப்படும் #தேம்பாவணி எனப்படும் காப்பியம் ஒன்றையும் இயற்றினார். தமிழில் சதுரகராதியைப் படைத்ததால், #தமிழ்அகராதியின்தந்தை  என்றே போற்றப்படுகிறார். மேலும் அவர், திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களையும், தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூலையும் எழுதியுள்ளார்.


திருக்குறளில் அறத்தையும் பொருளையும் லத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக்கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர். இதில் பரமார்த்த குரு கதையானது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும். தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் #வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாளான இன்று அவர் தமிழ் மொழிக்கு செய்த மகத்தான சேவையை நினைவுகூர்வோம் என குறிப்பிட்டுள்ளார்.