முத்திரைத்தாள் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் - செல்வப்பெருந்தகை

 
selvaperunthagai selvaperunthagai

முத்திரைத்தாள் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறது. தமிழகத்தில் வீடு, நிலம் வாங்கும் போது முத்திரை பத்திரம், கிரையம், தானம், வீடு கட்டுமான ஒப்பந்தம் மற்றும் செட்டில்மெண்ட் என பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. பத்திர பதிவுத்துறை நிலம், வீடு தவிர பல்வேறு இனங்களுக்கான ஆவணங்களையும் பதிவு செய்கிறது. இதற்கான முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணம் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. 

இதுவரை குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 20 என இருந்த நிலையில் அந்த கட்டணம் தற்போது ரூபாய் 100, 200, 500 என பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. உறுதிமொழி ஆவணத்திற்கு ரூபாய் 20 என இருந்த முத்திரைத்தாள் கட்டணம் ரூபாய் 200 வரை அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.