நீக்கிய வாழ்த்துச் செய்தியை எவ்வித மாற்றமுமின்றி மீண்டும் பதிவிட்ட செங்கோட்டையன்
வாழ்த்து போஸ்டரில் எம்ஜிஆர், ஜெயலலிதா உடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புகைப்படம் இடம் பெற்றிருந்தது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், அந்தப் பதிவையே நீக்கிய செங்கோட்டையன், தற்போது எவ்வித மாற்றமுமின்றி மீண்டும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், கார்த்திகை தீபத்திற்கு வாழ்த்து தெரிவித்து நேற்று போஸ்டர் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய் புகைப்படங்கள் வரிசையில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புகைப்படத்துடன் இந்த வாழ்த்து போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் புஸ்ஸி ஆனந்தா? என செங்கோட்டையனை நோக்கி சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.
சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானதால் புஸ்ஸி ஆனந்துடன் இருந்த வாழ்த்து பதிவை செங்கோட்டையன் நீக்கியதாக தகவல் வெளியானது. விமர்சனங்கள், கேள்விகள் எழுந்த நிலையில் பேஸ்புக் மற்றும் எக்ஸ் தளத்தில் இருந்து வாழ்த்து பதிவை நீக்கியுள்ளார் செங்கோட்டையன். சமூக வலைத்தளங்களில் எழுந்த விமர்சனம் காரணமாக சமீபத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் மற்றும் கட்சியினை அவ மதிக்கிறாரா என கேள்வி எழும்ப தொடங்கியது. இந்நிலையில் நீக்கிய கார்த்திகை தீ வாழ்த்து செய்தியை எவ்வித மாற்றமுமின்றி எக்ஸ் தளத்தில் செங்கோட்டையன் மீண்டும் பதிவிட்டுள்ளார்.
அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள். pic.twitter.com/RJYfZlXUj3
— K.A Sengottaiyan (@KASengottaiyan) December 4, 2025


