11,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை... கொண்டாட்டத்தில் செங்கோட்டையன்
கோபி தொகுதி தவெக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதை தொடர்ந்து அவரது அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், ஈரோடு மாவட்டத்தின் முக்கிய தொகுதியான கோபி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் இருந்தே முன்னிலை வகித்து வருகிறார்.14 வது சுற்றில் திமுக வேட்பாளர் என்.நல்லசிவத்தை விட 11,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.ஒவ்வொரு சுற்று முடிவிலும் இந்த வாக்கு வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே செல்வது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபி அருகே இருக்கும் கரட்டூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்களும், ஆதரவாளர்களும் குவியத் தொடங்கியுள்ளனர்.
கே.ஏ.செங்கோட்டையனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தொண்டர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், கரட்டூர் பகுதி முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவதாலும், அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கட்சி அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

