“யார் சொல்லியும் நான் தவெகவில் இணையவில்லை”- செங்கோட்டையன்
அமித்ஷா சொல்லி தான் செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததாக உதயநிதி ஸ்டாலின் கூறிய நிலையில், யார் சொல்லியும் நான் தவெகவில் இணையவில்லை. தெளிவாக முடிவெடுத்து தான் தவெகவில் இணைந்துள்ளேன். யாருடைய கருத்துக்களையும் ஏற்று நான் இணையவில்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆண்ட காலம் தூய்மையான ஆட்சியாக இருந்தது. அதனால் தான் பலமுறை வெற்றி பெற முடிந்தது. ஆனால் இப்போது மக்களுடைய தீர்ப்பை பொறுத்தவரையில் 2021ம் ஆண்டு தேர்தல் முடிவே இபிஎஸ்க்கு பதிலாக இருக்கும். காலக்கெடுவே நான் விதிக்கவில்லை, கட்சியை ஒன்றிணைக்க 5 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும், ஒரு மாதம் கூட எடுத்துக்கொள்ளலாம் என்ற கருத்தை மட்டும் தான் சொன்னேன். அதிமுகவில் கருத்து சொல்ல சுதந்திரம் இல்லை. திருநாவுக்கரசருடன் திருமணத்திற்கு சென்றேன். அவரை நட்பு ரீதியாகவே சந்தித்தேன், அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை. கோபிசெட்டிபாளையத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து பேருந்துகளில் கூட்டத்தை அழைத்து வந்துள்ளார்கள். அதிமுகவில் இருந்து என்னை வெளியேற்ற வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசை.. அது இப்போது நிறைவேறி இருக்கிறது.
யார் சொல்லியும் நான் தவெகவில் இணையவில்லை. தெளிவாக முடிவெடுத்து தான் தவெகவில் இணைந்துள்ளேன். யாருடைய கருத்துக்களையும் ஏற்று நான் இணையவில்லை. ஒவ்வொருவரின் கருத்துக்கும் பதில் சொல்ல முடியாது” என்றார்.


