“திமுக அரசிற்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள்”- செங்கோட்டையன்
இளைஞர்கள் வாழ்வில் விளையாடிய தி.மு.க அரசிற்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் என தவெக நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கடந்த 08.02.2026 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தொகுதி-II மற்றும் தொகுதி-IIA-இல் அடங்கிய பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுகள் தொழில்நுட்பக் காரணங்களால் இரத்து செய்யப்பட்டன. இத்தேர்வுகள் எதிர்வரும் 15.03.2026 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 08.02.2026 அன்றைய தேர்வுகள் இரத்து செய்யப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இரண்டு உதவிப்பிரிவு அலுவலர் மற்றும் நிரலர்கள், இரண்டு பிரிவு அலுவலர்கள் மற்றும் ஒரு சார் செயலாளர் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், துணைச் செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் இத்தகைய தவறுகள் நிகழாவண்ணம் கூடுதலான வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் தனது எக்ஸ் தளத்தில், “TNPSC Group 2&2A முதன்மைத் தேர்வினை தேர்வு நாளன்று கடைசி நேரத்தில் ரத்து செய்து இளைஞர்களின் கனவில் அடித்தது இந்தக் கையாலாகாத தி.மு.க அரசு. தங்களின் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க இப்போது அதிகாரிகள் சிலரை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதன் முழு பின்னணியும் வெளியே வந்து மக்கள் மத்தியில் செயலற்ற தி.மு.க. அரசு அம்பலப்பட்டு நிற்கும். இளைஞர்கள் வாழ்வில் விளையாடிய தி.மு.க அரசிற்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள். இளைஞர்களுடன் அவர்களின் நலன்களுக்காக எப்போதும் தவெக உறுதியாகத் துணை நிற்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

