"ஊழல் என்பதே இனி நடந்து விடக்கூடாது என்பதை கண்காணித்து வருகிறோம்"- செங்கோட்டையன்

 
“எதிர்காலத்தில் தமிழ்நாட்டை ஆளும் திறன் கொண்ட ஒரே தலைவர் விஜய்தான்”- செங்கோட்டையன்

தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் தூய்மையான ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் நோக்கமாக உள்ளது என தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.


கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் தூய்மையான ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் நோக்கமாக உள்ளது. அதனடிப்படையில் தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவறுகள் எங்கு நடந்தாலும் அதனை சுட்டிக்காட்டுகின்ற பொழுது எந்த தயக்கமும் இன்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் என்பதே இனி நடந்து விடக்கூடாது என்பதை கண்காணித்து வருகிறோம். அதில் கவனம் செலுத்தி வருகிறோம். எங்காவது அவ்வாறு தகவல்கள் வந்தால் அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் ஒரு இயக்கம் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளிலேயே பணநாயகத்தை முறியடித்து விட்டு ஜனநாயகத்தை உருவாக்குவதற்கு இன்றைய முதலமைச்சர் என்றைக்கும் முதலமைச்சராக இருக்க போகின்ற விஜய் அவர்களுக்கு மக்கள் வாக்களித்திருப்பது, இன்றல்ல அன்றே வாக்களிக்கப்பட்டது.

வருவாய் துறையை பொருத்தவரையில் ஒரு மாத காலமாவது அவகாசம் தரப்பட வேண்டும், அப்பொழுதுதான் சரியான புள்ளிவிவரத்தை சொல்ல முடியும். தற்பொழுது அதற்கான புள்ளி விவரங்கள் கையில் இல்லை. மேலும் வருவாய்த்துறையை பொறுத்தவரை அனைவருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் பட்டா தொடர்பான விஷயத்தில் ஏதாவது தவறு ஏற்பட்டால் நேரடியாகவே கவனத்திற்கு கொண்டு வரலாம். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.