பாபா சித்திக் படுகொலைக்கு மாநில அரசே பொறுப்பு: ஜவாஹிருல்லா
தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் பாபா சித்திக் படுகொலைக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று முறை காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக, காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த மராட்டிய மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரான பாபாசித்திக் நேற்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. பாபா சித்திக்கிற்கு 15 நாட்களுக்கு முன்பே அச்சுறுத்தல் வந்துள்ளது. இதையடுத்து அவருக்கான பாதுகாப்பு ஒய் பிரிவாக அதிகரிக்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு வளையத்தில்இருந்த தலைவரான பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டச் சம்பவம் மராட்டிய மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை வெளிக்காட்டி இருக்கிறது.

சட்டமன்றத் தேர்தல் வரும் சூழலில் பாபா சித்திக் நடைபெற்றுள்ள இப்படுகொலை குறித்து ஒளிவு மறைவற்ற நேர்மையான வெளிப்படைத்தன்மையுள்ள விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு பொது தளத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நபர்கள் படுகொலை செய்யப்படுவது இந்திய அரசியல் சூழலுக்கு உகந்தது அல்ல. இவரது படுகொலைக்குத் தற்போதைய மராட்டிய மாநில அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


