SIR குளறுபடி- வெளிநாட்டவர்கள் 3 பேர் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்ததால் பரபரப்பு!
தமிழ்நாடு தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் 3 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அசோக் நகர், நடேசன் சாலை பகுதியை சேர்ந்தவர் ஜித்தேந்திரநாத் (வயது38) என்ஜினியரான இவர் கனடா நாட்டில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.கடந்த 2022-ம் ஆண்டு ஜிதேந்திரநாத் மனைவி மற்றும் மகனுடன் கனடா நாட்டிற்கு சென்று அங்கேயே குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். சகோதரர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் சென்னை வந்த ஜிதேந்திரநாத் மீண்டும் கனடா நாட்டிற்கு செல்ல சென்னை விமான நிலையம் வந்தபோது குடியுரிமை அதிகாரிகள் அவரது கை விரலில் இருந்த மையை பார்த்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தி.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டது தெரிந்தது. மேலும் எஸ்.ஐ.ஆர் நடைமுறைக்கு பின்னர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படாததால் அடையாள அட்டையை பயன்படுத்தி ஓட்டு போட்ட தாகவும் தெரிவித்தார். இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் கே.கே நகர் போலீசாரிடம் ஜித்தேந்திரநாத்தை ஒப்படைத்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதேபோல் நேற்று இரவு ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்ல வந்த விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர ரகுபதி(68) சென்னை விமான நிலைய குடியேற்றத்துறை அதிகாரிகளிடம் பிடுபட்டார். திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட இவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை விருகம்பாக்கம் பகுதியில் குடியேறியுள்ளார். பிறகு ஆஸ்திரேலியா சென்றவர் 1997 ஆம் ஆண்டு அந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார், கடந்த மார்ச் 17ஆம் தேதி சென்னை வந்து விருகம்பாக்கத்தில் தங்கியிருந்துள்ளார். வாக்காளர் பெயர் பட்டியலில் இவருடைய பெயர் இருப்பதாக இவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சந்திரசேகர ரகுபதி தான் வைத்திருந்த இந்திய வாக்காளர் அடையாள அட்டையை வைத்து விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஆவிச்சி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது. அவரை கைது செய்த விருகம்பாக்கம் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த நபர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வாக்களித்துவிட்டு இலங்கைக்கு சென்று திரும்பும் போது கைது செய்யப்பட்டார். சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சார்லி பாலச்சந்திரன் (68). இவர் இலங்கையிலிருந்து கடந்த 1986 ஆம் வருடம் இந்தியா வந்து கேரளாவைச் சேர்ந்த அண்ணம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வந்தார். கடந்த 2009 ஆம் வருடம் கொடுங்கையூர் ஜம்புலி காலனி ராகவன் தெரு பகுதியில் வீடு வாங்கி மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் வசித்து வந்துள்ளார். 2021 ஆம் வருடம் கொடுங்கையூர் வீட்டினை விற்பனை செய்துவிட்டு துரைப்பாக்கம் பகுதிக்கு சென்று விட்டார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு கொடுங்கையூர் ஜம்புலி நியூ காலனி ராகவேந்திர பகுதியில் வசித்தபோது வாக்காளர் அடையாள அட்டை. ஆதார் கார்டு. பான் கார்டு ஆகியவற்றை பெற்றுள்ளார். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி பாகம் 34 ல் பத்ம பிரகாஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இவர் தனது வாக்கை செலுத்தியுளளார். அதன் பிறகு கடந்த ஒன்றாம் தேதி இலங்கை சென்று விட்டு நேற்று சென்னை விமான நிலையம் வந்தடைந்த போது குடியுரிமை பணி அதிகாரிகள் சோதனை செய்தபோது இவர் இடது கை ஆள்காட்டி விரலில் வாக்கு அளித்ததற்கான மை இருந்ததை கண்டு குடியுரிமை பணி அதிகாரிகள் இலங்கையை சேர்ந்த நபர் இந்தியாவில் வாக்களித்தது எப்படி என கேட்டுள்ளனர். அதற்கு சார்லி பாலச்சந்திரன் தான் 1986 முதல் இந்தியாவில் தான் உள்ளதாகவும் குடியுரிமையை இன்னும் மாற்றவில்லை இலங்கை குடியுரிமை உள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கு குடியுரிமை பணி அதிகாரிகள் இலங்கையை சார்ந்த நபர் இந்தியாவில் வாக்களித்தது சட்டப்படி குற்றம் எனக் கூறி கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததனர். கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் விமான நிலையம் சென்று சார்லி பாலச்சந்திரனை கொடுங்கையூர் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வரும் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து பாலச்சந்திரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

