செந்தில் பாலாஜி வழக்கு- பதில்மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு மேலும் அவகாசம்!
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து செய்த நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், விடுவிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ் ஆஜராகி, பதில்மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, அவகாசம் வழங்கி விசாரணையை ஆகஸ்ட் 21ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள் அன்றைய தினம் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டுமெனவும், மீண்டும் அவகாசம் கேட்கக்கூடாது எனவும் அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்தினர்.