செந்தில் பாலாஜி 'டிஸ்சார்ஜ்'... மீண்டும் சிறைவாசம்
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஓர் ஆண்டாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஞாயிறன்று திடீரென மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த 2நாட்களாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எக்மோ பரிசோதனைகளும், இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளதாக என்று பல்வேறு பரிசோதனைகளும் மேற்கொண்டனர். மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமத்திற்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அதற்கான மருந்து மாத்திரைகள் உட்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். சிகிச்சையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.