டாஸ்மாக் கொள்முதலில் ரூ.1 லட்சம் கோடி ஊழலா? கிருஷ்ணசாமி மீது செந்தில்பாலாஜி அவதூறு வழக்கு
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு எதிராக தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாகவும், 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லை என்பன உள்பட ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரை கட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாகவும், ட்விட்டர் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்துள்ளதாகவும், பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளதாகவும் கூறி, கிருஷ்ணசாமிக்கு எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ள கிருஷ்ணசாமியை தண்டிக்க வேண்டும் என கோரியுள்ளார்.