செந்தில் பாலாஜி அக்.4ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு!

 
1

செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் தரப்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்து வந்த நிலையில் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு வந்தது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டது. மேலும் தேவையில்லாத காரணங்களுக்காக வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரினாலோ சாட்சிகளை கலைக்க முற்பட்டாலோ ஜாமீன் ரத்து செய்யப்படும் என பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது. மேலும் வாரத்தில் இரண்டு நாட்கள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன் அடிப்படையில் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டார். செந்தில் பாலாஜி நேற்று மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். செந்தில் பாலாஜிக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் திங்கட்கிழமையான இன்று இரண்டாவது முறையாக செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். மேலும், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆஜரானார். அப்போது, குற்றம் நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் பணிபுரிந்த வங்கி ஊழியர்களின் விவரங்களை கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனு தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் தாக்கல் செய்யபட்ட இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், அரசு தரப்பு சாட்சியான கணினி தடயவியல் பிரிவின் உதவி இயக்குனர் மணிவண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக ஆஜராகவில்லை என்றும், அதுதொடர்பான மருத்துவ சான்றிதழை கடந்த விசாரணையின் போது தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் ம.கெளதமன் ஆஜராகி, அமலாக்கத்துறையின் பதில் மனுவை ஏற்க கூடாது என்றும், வங்கி ஊழியர்களின் விவரங்கள் கோரிய மனுவை தள்ளுபடி செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயனிடம் இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 14ஆம் தேதி ஒத்திவைக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்தது. ஆனால் அதனை நிராகரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில் மீண்டும் அக்டோபர் 4 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத அரசு தரப்பு சாட்சியான தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணன் அக்டோபர் 4 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என பிடிவாரண்ட் உத்தரவும் பிறப்பித்துள்ளது முதன்மை அமர்வு நீதிமன்றம்.