அமைச்சராகிறாரா செந்தில் பாலாஜி?? சிறையில் இருந்து வந்ததும் என்ன திட்டம் தெரியுமா?

 
Senthil Balaji

ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக எந்த தடையும் இல்லை என கூறப்படும் நிலையில், அவர் மீண்டும் அமைச்சராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி  கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி, கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட்  12ம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்  செந்தில் பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

#JUSTIN உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!.. செந்தில் பாலாஜியே வருக வருக..! - முதல்வர் ஸ்டாலின்.. 

இந்நிலையில்  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்குவதற்கான அலுவல் நடைமுறைகள் நிறைவடைந்தும் இன்று மாலை அல்லது நாளை காலை புழல் சிறையில் அவர் வெளியில் வருவதற்கு வாய்ப்புண்டு என்று கூறப்படுகிறது.  இன்று மதியம் 3 மணிக்குள் சிறைத்துறை பணிகள் முடிவடையும் பட்சத்தில் சிறையில் இருந்து வெளிவரும் செந்தில் பாலாஜி , முதலமைச்சர் மு.க.ஸ்டாலில் மாலை 5 மணிக்கு டெல்லி செல்ல உள்ள நிலையில் முன்னதாக  விமான நிலையத்தில் அவரை சந்திப்பார் என கூறப்படுகிறது.  முதலமைச்சரை சந்தித்ததற்குப் பிறகு மருத்துவமனை சென்று உடல் நலத்தை பரிசோதிக்க உள்ளார். 

ஒருவேளை நாளை காலை சிறையில்  இருந்து வெளிவந்தால் நாளை இரவு முதலமைச்சரை சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  அத்துடன் நாளை வெள்ளிக்கிழமை என்பதால்  சென்னையில் தங்கி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது.  இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  தற்போது திமுக அமைச்சரவையில் முதலமைச்சர் நீங்கலாக 33 அமைச்சர்கள் உள்ளனர். மேலும் ஒருவர் அமைச்சரவையில் இடம் பெறலாம் என்பதால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் எனவும்,  தமிழக அமைச்சரவையில் இலாக்காக்கள் மாற்றமும்,  செந்தில் பாலாஜி அமைச்சராவது குறித்த அறிவிப்பும் சேர்ந்தே வெளியாகும் என்று கூறப்படுகிறது.