செந்தில் பாலாஜி வழக்கு நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

 
1

அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் தரப்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்து வந்த நிலையில் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு வந்தது. செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. செந்தில் பாலாஜி மீண்டும் தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். செந்தில் பாலாஜிக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகி வருகிறார். இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் ஆஜராவதற்காக விசாரணையை ஒத்திவைக்க கோரியது செந்தில் பாலாஜி தரப்பு. இதனை ஏற்ற நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணையை நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும், மேற்கொண்டு அவகாசம் கேட்கக்கூடாது என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.