செந்தில்பாலாஜி மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் தள்ளிவைப்பு..!

 
1

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளி வைத்திருந்தது.

இந்நிலையில், வங்கி அசல் ஆவணங்களின் அடிப்படையில் மீண்டும் வாதிட அனுமதிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்.22 அன்று வங்கியின் அசல் ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது. இருதரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில் கடந்த ஏப்.30 அன்று அந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும், என நீதிபதி எஸ்.அல்லி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வங்கி சார்பில் வழங்கப்பட்ட ஆவணங்களில், இரு ஆவணங்கள் நகல் எடுக்கப்பட்டவை என்பதால் அந்த அசல் ஆவணங்களையும் ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை அமலாக்கத்துறையின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இதுதொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 4-ம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி பதில்மனு தாக்கல் செய்தார். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், ‘கடந்த 2012 முதல் 2022 வரை பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் சிட்டி யூனியன் வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கிகளில் பணிபுரிந்த வங்கி ஊழியர்களின் விவரங்களை வழங்க வேண்டும். 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் செந்தில்பாலாஜி மற்றும் அவரது மனைவியின் பெயர்களில் டெபாசிட் செய்தவர்களின் பான் கார்டு விவரங்களையும் தெரிவிக்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் இருதரப்பும் வரும் ஜூன் 10ம் தேதியன்று, வாதிட வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை தள்ளி வைத்தார். மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஜூன் 10ம் தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளார்.