“விஜய் வாகனத்தின் உள்ளே சென்று விளக்குகளை அணைத்துவிட்டார்”- செந்தில் பாலாஜி
ஆம்புலன்ஸ் வாகனங்களை அவர்கள்தான் கூட்டத்திற்கு வரவழைத்தார்கள்.. செருப்பு வீசப்பட்ட சம்பவம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி, “என்னை பற்றி பேச தொடங்கியதும் செருப்பு வீசப்பட்டது என்பது தவறானது. செருப்பு வீசப்பட்ட நேரத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே தண்ணீர் கேட்டு மக்கள் குரல் கொடுத்தனர். தொடர்ந்து குரல் எழுப்பியும் தண்ணீர் கிடைக்காததால் கவனத்தை ஈர்க்க சிலர் கையில் கிடைத்ததை வீசி எறிந்தனர். வாகனத்தின் முன் இருக்கையில் விஜய் அமர்ந்திருந்தால் நெரிசல் ஏற்பட்டிருக்காது.
வழக்கமாக அரசியல் தலைவர்கள் செய்வதற்கு நேர் மாறாக, விஜய் வாகனத்தின் உள்ளே சென்று, விளக்குகளை அணைத்துவிட்டார். அவரைக் காண வேண்டும் என்பதற்காகவே கூட்டம் அவரை பின் தொடர்ந்தது. கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் வாகனத்தை முன்கூட்டியே நிறுத்திவிடலாம் என காவல்துறை எச்சரித்த பின்பும், தவெகவினர் அதை கேட்காமல் வாகனத்தை நகர்த்திச் சென்று அங்கு நிறுத்தியுள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனங்களை அவர்கள்தான் கூட்டத்திற்கு வரவழைத்தார்கள்.. செருப்பு வீசப்பட்ட சம்பவம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. கரூரில் பரப்புரை நடக்கும் இடத்திற்கு 500 மீட்டருக்கு முன்பாகவே விளக்கை அணைத்து ஸ்க்ரீன் போட்டு பேருந்தின் உள்ளே விஜய் உள் பகுதிக்கு சென்றுவிட்டார். கூட்டம் எல்லாம் பரப்புரை பகுதிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்தாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.


