பல்லாவரம் குடிநீரில் கழிவுநீர்- மருத்துவமனையில் 50-க்கு மேற்பட்டோர் அனுமதி
பல்லாவரம் குடிநீரில் கலந்த கழிவுநீரை அருந்தியவர்கள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அதன் எண்ணிக்கை 50-ஐ தாண்டியது.
சென்னை அடுத்த பல்லாவரம், மலை மேடு, காமராஜபுரம், முத்தாலம்மன் தெரு, மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் நேற்று குழாயில் வந்த குடிநீரை அருந்திய பலர் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு, அடுத்தடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. இதில் இருவர் உயிரிழந்த நிலையில், 14 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 30 பேர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு 4 பேர் பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டார். பல்லாவரம் லட்சுமி தனியார் மருத்துவமனையில் 5 பேர் சிகிச்சையில் உள்ளனர். இரண்டு வார்டுகள் முழுமையாக மருத்துவமனையில் நிரம்பிய நிலையில் கூடுதலாக 30 படுக்கைகள் அடங்கிய அறை தயார் நிலையில் இருப்பதாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பழனிவேல் தெரிவித்தார்.