சவுக்கு சங்கருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி..
நீலகிரியில் இருந்து சென்னை அழைத்து வரும் வழியில் திடீரென சவுக்கு சங்கருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெண் காவலர்களை அவதூறாக பேசியது, ஹோட்டல் அறையில் கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் முதலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார். அந்தவகையில் போலீசார் இன்று நீலகிரியில் இருந்து ஆத்தூர் வழியாக வேன் மூலம் சவுக்கு சங்கரை சென்னை அழைத்துகொண்டு வந்துகொண்டிருந்தனர்.

அப்போது திடீரென சவுக்கு சங்கருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீஸார் அவரை சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தகவலறிந்து பத்திரிக்கையாளர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்த போது, புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர். அத்துடன் பத்திரிக்கையாளர்களை வெளியேறும்படி மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


