சைபர் கிரைமால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழந்த பணத்தை பெற்றுதர உறுதி - சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்..

 
சங்கர் ஜிவால்

இணைய வழி குற்றத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களின் புகார்கள் மீது   நடவடிக்கை எடுக்கப்பட்டு இழந்த பணத்தை  பெற்று தருவது உறுதி செய்ய  வேண்டுமென  தமிழ்நாடு காவல் ஆணையர் சங்கர் ஜீவால் அறிவுறுத்தியுள்ளார். 

தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகத்தில் சைபர் குற்றங்களை தடுப்பதற்கு காவல்துறையினருக்கு ஒரு நாள் பயிற்சி நிகழ்ச்சி  நடத்தப்பட்டது .  இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “இணைய குற்றங்களை கையாளும் காவல்துறையினர் இணைய வழி குற்றங்கள் சம்பந்தமான வழக்குகளின் விசாரணை துரிதமான முறையில் நடத்தப்பட்டு குற்றவாளிகளை கைது செய்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அவர்கள் இழந்த பணத்தை பெற்றுத்தர உறுதி செய்ய வேண்டும்” என்றார். 

இந்த நிகழ்ச்சியில் இணைய வழி குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் சந்தீப் மிட்டல்,   இணையவழியில் நடைபெறும் பல்வேறு இடைவெளி கூட்டங்கள் சம்பந்தமாக காவல் துறையினர் இடையே உரையாற்றினார்.  குறிப்பாக  இணைய வழி குற்றங்களை தடுப்பதற்கும் குற்றங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வகையில் குறைகளை நிவர்த்தி செய்வது என்பது தொடர்பாக செயல்முறைகளை  எடுத்துரைத்தார். தொலைத் தொடர்பு துறை தமிழ்நாடு, இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய நிபுணர்களும் தங்களின் பல்வேறு தளங்களில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து  காவல்துறையினருக்கு பயிற்சி வழங்கினர்.  

ஆன்லைனில் மதுபானம் விற்பனை என பணம் மோசடி ! வங்கி ஊழியரின் பணத்தையே ஆட்டை போட்ட சைபர் குற்றவாளிகள் !!

மேலும் இணைய வழி குற்றப்பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள்,   இணையக்கூடம் மற்றும் இணைய தன்னார்வலர்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த பயிற்சி நிகழ்ச்சியில் இந்திய சைபர் கிரைம் மையம் ( 14 C) இருந்து பல்வேறு புதிய முன்னெடுப்புகள் மற்றும் வலைத்தளங்கள் பற்றி விசாரணை மேற்கொள்வதற்கும் காவல்துறையினருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களுக்கும் இணைய குற்றங்களை  தடுக்க எடுத்துக்கூற வேண்டிய வழிகாட்டுதல்களையும் இந்த கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. அவை, “

*  மின்னஞ்சல்கள் மற்றும் இணையதள இணைப்புக்களை கவனமாக கையாளுங்கள். தூண்டில் மின்னஞ்சல்கள், சைபர் தாக்குதல் நடத்துபவர்கள் உங்கள் கணிணியை அணுகுவதற்கான பொதுவான வழியாகும். சந்தேகத்திற்குரிய அறிமுகமில்லாத அனுப்புனர்கள் அனுப்பும் இணையதள இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். ஏதாவது இணையதள இணைப்புக்களை லிங்க்குகளை கிளிக் செய்வதற்கு முன்பு அது முறைப்படியானதுதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல் இணைப்புகள் மற்றும் மின்னணு கோப்புக்களை கிளிக்செய்வதற்கு முன்பும் அல்லது ஏதேனும் தகவல்களை பதிவிறக்குவதற்கு முன்பும் மின்னஞசல்களின் சட்டப்பூர்வமான தன்மைகளை உறுதி செய்து கொள்ளவும்.

* மென்பொருள் கோப்புக்கள் மற்றும் மென்பொருள் செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் மென்பொருள் வழங்குநர்களிடமிருந்து பதிவிறக்கம் செய்யவும் மற்றும் போலியான பதிப்புகளை தவிர்கவும். ஏனெனில் அவை தீங்கு செய்பவையாக இருக்கலாம்.

சைபர் கிரைம்

* நம்முடைய இரகசிய தகவல்களை பகிர்ந்து ஏமாற வேண்டாம். தொலைபேசி அழைப்புக்கள் அல்லது மின்னஞ்சல்கள் மூலம் வரும் தகவல் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டாம்.

* வலுவான கடவுச்சொல்லை(Password) பயன்படுத்தவும். ஒவ்வொரு கனத்திற்கும் தனிப்ட்ட மற்றும் சிக்கலான கடவுச் சொற்களை உருவாக்கி அவற்றை அவ்வப்போது மாற்றவும்.

* சமூக ஊடகங்கள் அல்லது பாதுகாப்பற்ற தளங்களில் முக்கியமான தகவலை பகிர்வதை தவிர்க்கவும்.(உங்கள் முகவரி மற்றும் நிதி தொடர்பான விவரங்கள்).

* "சைபர் அரெஸ்ட" என்பது சட்டத்திலேயே இல்லை. சைபர் கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) என்று எவராவது கூறினால் அது நிச்சயமாக ஒரு மோசடி என்று அறியவும். அதுபற்றி உடனடியாக போலீசில் புகார் செய்யுங்கள்.

* நீங்கள் லாட்டரி சீட்டை வாங்கவில்லை என்றால் அதில் பரிசு பெறுவது சாத்தியமா? மிகவும் கவனமாக இருக்கவும்.

பாதிக்கபட்ட பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு : சைபர் குற்றத்தால் நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால் நடவடிக்கை கோரி சைபர் கிரைம் டோல் ப்ரீ கெல்ப் லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணைதளத்தில் புகாரை பதிவு செய்யவும்.  பொதுமக்கள் மத்தியில் இந்த வழிமுறைகளை விழிப்புணர்வாக கொண்டு செல்ல வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளனர்