ரயில் நிலையங்களில் அதிகரிக்கும் குற்றங்கள்- தமிழக டிஜிபி உடன் ரயில்வே டிஜிபி சந்திப்பு

 
சங்கர் ஜிவால் சங்கர் ஜிவால்

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியுடன் ரயில்வே டிஜிபி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்( சட்டம் ஒழுங்கு டிஜிபி) சங்கர் ஜிவால், மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் ரயில்வே காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ரயில்வே டிஜிபி வன்னியபெருமாள், ரயில்வே ஐஜி பாபு, எஸ். பி. ஈஸ்வரன் ஆகியோர் இந்தஆலோசனையில் பங்கேற்றனர். ரயில் நிலையங்கள், ரயில்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது கண்காணிப்பு கேமராக்களின்  செயல்பாடுகள், ரயில்வே காவல்துறையில் போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் இருக்கிறார்களா? கடந்த ஆண்டுகளை காட்டிலும் குற்றங்கள் குறைந்துள்ளதா? கவனக்குறைவாக  தண்டவாளங்களை கடக்கும்போது அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா? என தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி, ரயில்வே டிஜிபியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

ரயில்களில் செயின் பறிப்பில் ஈடுபடுபவர்கள், பயணிகளின் உடைமைகளை திருடுபவர்கள் சிறையில் இருந்து வெளிவந்த பின் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும், அவசர உதவிக்கு ரயில்வே போலீஸ் ஹெல்ப்லைன் 1512ஐ தொடர்பு கொள்ள தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், பெண்கள், முதியவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு, உடைமைகள் பாதுகாப்பு தொடர்பாக பயணிகளிடம் ...  விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அறிவுத்தல்கள் வழங்கப்பட்டன.

ஜோலார்பேட்டை அருகே கர்ப்பிணி தள்ளிவிடப்பட்ட சம்பவம், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம்  செயின் பறிப்பு போன்ற இரண்டு் சம்பவங்களும் போதை நபர்களால் தான் நடைபெற்றுள்ளது. எனவே ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் குடிபோதையில் இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.