நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள்; முதல்வர் மு.க ஸ்டாலின் மரியாதை!

 
sivaji ganesan

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளையொட்டி சென்னை அடையாறு மேம்பாலம் அருகே உள்ள மணிமண்டபத்தில் இருக்கும் திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.

sivaji ganesan

முன்னதாக நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் குறித்து தமிழக அரசு வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில்,  நடிப்பு தனது மூச்சு. நடிப்பு ஒன்று தான் தனக்கு தெரிந்த தொழில். நடிப்பே தெய்வம் என தனது சுயசரிதையில் குறிப்பிட்டு அதற்கு ஏற்ப வாழ்ந்து உச்சத்தை தொட்டவர் நடிகர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருடைய நினைவு நாளில் தமிழக அரசின் சார்பில் சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையை கருணாநிதி திறந்து வைத்தார். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று மக்களாலும் திரை உலகத்தினரும் போற்றப்பட்டார். பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது, செவாலியே விருது, தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட உயரிய விருதுகளையும் பெற்றார்.

அவருடைய பெருமையை போற்றுகின்ற வகையில் அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்.  இந்த பூமிப்பந்தில் மனித குலத்தின் கடைசி ரசிகன் உயிர் வாழும் வரை சிவாஜி கணேசன் என்கிற சகாப்தத்திற்கு மரணமும் இல்லை, காலமும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.