சினிமா ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஷாக்..! நாளை முதல் புதுப்படங்கள் ரிலீஸாகாது..!
புதுச்சேரியில் 25% கேளிக்கை வரி, 18% GSTவரி விதிப்பால் நாளை முதல் திரைப்படங்கள் வெளியிட போவதில்லை என தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் முடிவு செய்து உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் தியேட்டர் டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி வரி மற்றும் திரைபடங்களுக்கு மாநில அரசின் கேளிக்கை வரி என்ற இரட்டை வரி விதிப்பு முறை தற்போதுவரை அமலில் உள்ளது.
புதுச்சேரியில் ரூ.100க்கும் குறைவான சினிமா டிக்கெட்டுக்கு 12 சதவீதமும், ரூ. 100க்கு மேல் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தியேட்டர்களில் போதுமான வசூல் இல்லாததால் தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வரும் சூழல் நிலவி வருகிறது.
இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து, தமிழகத்தை ஒப்பிட்டு கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உள்ளாட்சித்துறை செயலரை அழைத்து நடவடிக்கை எடுக்கும் படி முதல்வர் உத்தரவிட்டார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால், திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் ஆகஸ்டு மாதம் முதல் புதுச்சேரியில் திரைப்படங்களை வெளியிட போவதில்லை என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தமிழ்நாட்டில் கேளிக்கை வரியை 4 சதவீதமாக குறைத்து விட்டனர். ஆனால் புதுச்சேரயில் 25 சதவீதம் என்பது ஏற்புடையது அல்ல. . இதன் காரணமாகவே புதுச்சேரியில் 18 திரையரங்கிற்கு மேல் மூடிவிட்டார்கள். தமிழகத்தை போல கேளிக்கை வரியை புதுச்சேரி அரசு குறைக்க வேண்டும். ஆகஸ்டு மாதம் முதல் புதுச்சேரிக்கு திரைப்படங்கள் இல்லை என விநியோகிஸ்தர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் இருந்து வரும் கேரவன், கேம்பர் வேன்கள் தற்காலிக வரி கட்ட வேண்டும். இலகு, நடுத்தர கேரவன், கேம்பர் வேன்கள் 3 நாட்கள் சினிமா, விளம்பர சூட்டிங் எடுக்க ரூ.860, கனரக வாகனங்கள் ரூ.1,340 சாலை வரி செலுத்தி அனுமதி பெற வேண்டும். 7 நாட்களுக்கு இலகு நடுத்தர ரக வாகனங்களுக்கு ரூ.1,800, கனரக வாகனங்களுக்கு ரூ.2,800 எனவும், 30 நாட்களுக்கு இலகு, நடுத்தர ரக வாகனங்களுக்கு ரூ.4,200, கனரக வாகனங்களுக்கு ரூ.8,800 எனவும் வரி செலுத்த வேண்டும் என மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.


