பயணிகளுக்கு ஷாக்! ஏர் இந்தியா விமானக் கட்டணம் ரூ. 26,000 வரை உயர்வு..!
உலகம் முழுதும் விமானங்களுக்கான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி இறுதியில் விமான எரிபொருள் ஒரு பேரல் 9,250 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச் இறுதியில் 18,162 ரூபாயாக அதிகரித்தது. விமான போக்குவரத்து சேவைக்கான செலவில், 40 - 45 சதவீதம் வரை எரிபொருளுக்கு செலவிடப்படுவதாக விமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், எரிபொருள் விலை ஏற்றம் விமான நிறுவனங்களை நெருக்கடிக்குள் தள்ளின. இதையடுத்து, விமான கட்டணத்தில் விதிக்கப்பட்டு வந்த எரிபொருள் செலவுக்கான சீரான கட்டணத்தை, தொலைவுக்கு ஏற்ப நிர்ணயிக்க, 'இண்டிகோ' உள்ளிட்ட நிறுவனங்கள் முடிவு செய்தன. இதனால் அந்நிறுவன விமான கட்டணங்கள் சமீபத்தில் உயர்த்தப்பட்டன. இந்த வரிசையில், விமான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளதாக, 'ஏர் இந்தியா' நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, பயண துாரத்தின் அடிப்படையில் உள்நாட்டு விமான கட்டணத்தில், இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 'குறைந்தபட்சம் 500 கி.மீ., வரையிலான பயணங்களுக்கு 299 ரூபாயும்; 2,000 கி.மீ.,க்கும் மேலான நீண்டதுார உள்நாட்டு பயணங்களுக்கு அதிகபட்சமாக 899 ரூபாயும் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும்' என, ஏர் இந்தியா குறிப்பிட்டு உள்ளது. இதேபோல் சர்வதேச விமான பயணங்களுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணமாக, சார்க் நாடுகளுக்கு 2,232 ரூபாயும், ஐரோப்பிய நாடுகளுக்கு 19,605 ரூபாயும், வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நீண்டதுார நாடுகளுக்கு செல்ல 26,040 ரூபாய் வரை கூடுதல் கட்டணமாக பயணியர் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதில், பெரும்பாலான பாதைகளுக்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் எனவும், ஐரோப்பிய, வட அமெரிக்க, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கான கட்டண உயர்வு நாளை மறுதினம் முதல் அமலுக்கு வரும் எனவும் ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.



