மக்களுக்கு அடுத்து ஷாக்..! அமலுக்கு வந்தது ரயில் பயணக் கட்டண உயர்வு..!

 
1 1

உலகின் இரண்டாவது மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து ரயில்வேயாக இந்திய ரயில்வே திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே நிர்வாகம் தனது சேவைகளை கணிசமாக விரிவுப்படுத்தியுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதில், கடந்த 2024-25 ஆம் ஆண்டில் செயல்பாட்டு செலவு ரூ.2,63,000 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால், தனது இலக்குகளை அடைய ரயில் சேவைகளை அதிகரிக்கவும், செலவுகளை கட்டுப்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

அதிக செலவீனங்களை சமாளிக்க ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளதாக கடந்த 21- ம் தேதி ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த புதிய கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, சாதாரண ரயில்களில் தினசரி பயணிக்கும் பயணிகளுக்கு 215 கிலோ மீட்டர் வரை எந்த கட்டண உயர்வும் கிடையாது. அதற்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. சீசன் டிக்கெட் மற்றும் புறநகர் ரயில் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால், 215 கி.மீ தூரத்திற்கு மேல் மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி (AC), ஏசி அல்லாத (Non-AC) வகுப்பில் பயணிப்போருக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏசி அல்லாத பெட்டிகளில் 500 கி.மீ பயணத்திற்கு, பயணிகள் ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த புதிய கட்டணங்கள் இன்று முதல் மற்றும் அதற்குப் பிறகு பதிவு செய்யப்படும் பயண டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பயண சீட்டுகளுக்கு கட்டண உயர்வு வசூலிக்கப்பட மாட்டாது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த கட்டண உயர்வு அறிவிப்பு குறித்து பயணிகள் அறிந்து கொள்ள ரயில் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஏற்கெனவே ஒருமுறை ரயில் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.