காய்கறி,கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்...! டிசம்பர் 9 முதல் லாரி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக்..!

 
1 1

தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் வேலூரில் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''மத்திய அரசு நாடு முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேல் இயங்கும் சரக்கு லாரிகளுக்கு ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து எப்.சி புதுப்பிப்பு கட்டணமாக ஒரு ஆண்டுக்கு ரூ.33,040 என நிர்ணயித்துள்ளது. இதுவரை எப்.சி கட்டணம் ₹850 இருந்த நிலையில் ஒரே இரவில் இவ்வளவு அதிகரித்து இருப்பதை ஏற்க முடியாது.

இந்த கூடுதல் கட்டணம் காரணமாக வேளாண் பொருட்கள், ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சரக்குகளை ஏற்றி செல்லும் சிறு மற்றும் நடுத்தர லாரி உரிமையாளர்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள். 15 ஆண்டுகள் ஆன வாகனங்களுக்கு இன்ஜினை மாற்றி புதுப்பிக்கலாம். ஆனால் கட்டணத்தை இவ்வளவு உயர்த்துவதற்கு முறையான காரணம் இதுவரை கூறப்படவில்லை.

அரசாங்கத்திற்கே சொந்தமான 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பல வாகனங்கள் இன்னும் இயங்குகின்றன. ஆனால் தனியார் வாகனங்களுக்கு மிகப்பெரிய கட்டணம் விதிக்கப்படுகிறது. கேரளா இந்த கட்டண உயர்வை ஒரு வருடத்திற்கு தள்ளிப் போட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் எப்.சி கட்டண உயர்வை முற்றிலும் ரத்து செய்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் இந்த கட்டணம் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. 

இந்த கட்டண உயர்வை கண்டித்து வரும் டிசம்பர் 9ம் தேதி இரவு 12 மணியிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்க உள்ளோம். நெல், ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றி செல்லும் லாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கேஸ் சிலிண்டர் ஏற்றிச் செல்லும் லாரிகள் மட்டும் வேலை நிறுத்தத்தில் இருந்து விலக்கப்படுகின்றன.

தமிழக அரசு இதுவரை எப்.சி கட்டண உயர்வை ரத்து செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தேர்தலுக்கு முன்பு 33 சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் என, கூறியிருந்தும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பல பிரச்சினைகள் இருந்த போதிலும், மாநில முதலமைச்சர் லாரி உரிமையாளர்களை ஒருமுறை கூட அழைத்து கலந்துரையாடவில்லை.

லாரி வேலைநிறுத்தம் தொடங்கினால் தானியங்கள், ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சந்தைக்கு வராமல் போகும் என்பதால், விலை உயர்வு நேரிடும். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இக்கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் போராட்டம் தீவிரம் அடையும்.

எனவே சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளான எப்.சி கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுதல், பழைய கட்டணமான ₹850க்கு மீண்டும் மாற்றுதல், 15 ஆண்டுகள் கடந்த வாகனங்களுக்கு விலக்கு, லாரி உரிமையாளர்களுடன் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் 10 நாட்களுக்குள் ஏற்கப்படாவிட்டால் தென் மாநிலங்களில் உள்ள அனைத்து லாரிகளும் முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்" என்றும் எச்சரித்தார்.